“பேசி தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டு இபிஎஸ் மிரட்டுகிறார்! பொதுக்குழுவை கூட்டுங்கள், அதில் பேசி முடிவெடுக்கலாம்”- சி.வி.சண்முகம்
அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கியது சட்டப்படி செல்லாது என அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவில் உள்ள நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கியது சட்டப்படி செல்லாது. பேசி தீர்த்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டு ஒரு பக்கம் கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்கும் வேலையில் ஈபிஎஸ் ஈடுபடுகிறார். நாங்கள் ஏதோ துரோகம் செய்துவிட்டது போலவும், இயக்கத்தை பிளவுப்படுத்தியது போலவும் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல, தன் பொறுப்புக்கு பாதிப்பு வருவதால் கசப்பை மறந்து ஒன்றுகூடுவோம் என்கிறார். தவெக சார்பில் அதிமுகவோடு கூட்டணி பேச வந்தார்கள். இன்று இல்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்தாலும் அதுதான் உண்மை. ஆனால் அவர்களை உதாசீனப்படுத்தி அனுப்பினார். கூட்டணி அமைய கூடாது என்பதிலேயே குறியாக இருந்து அதற்கேற்ப பேசி அவர்களை வெளியேற்றினார். எடப்பாடி பழனிசாமி வலிமையான கூட்டணியை அமைக்க மறுத்ததே அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். நீக்கப்பட்டவர்கள் மற்றும் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க இபிஎஸ் மறுத்துவிட்டார், தேமுதிகவை அரை பர்சன்ட் கட்சி என எடப்பாடி பழனிசாமி சொன்னார். இப்படி சொன்னால் எந்த கட்சி கூட்டணிக்கு வரும். தேமுதிக வலுக்கட்டாயமாக கூட்டணியை விட்டு வெளியேற்றப்பட்டது.
பொதுக்குழுவை கூட்டுங்கள், அதில் பேசி முடிவெடுக்கலாம். எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளை மிரட்டி வைத்துள்ளார். வாருங்கள் பேசலாம் என சொல்லிவிட்டு எங்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குகிறார் எடப்பாடி பழனிசாமி. இது சட்டத்திற்கு புறம்பானது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தோல்வி மேல் தோல்வி, மீண்டும் ஒரு படுதோல்வியை அதிமுக சந்தித்து இருக்கிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். அதிமுக வாக்கு வங்கி தொடர்ந்து சரிந்து வருகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய மறுத்தார். எடப்பாடி பழனிசாமி யாரையும் அரவணைக்கவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.