×

“எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு இல்லை; அவரை எம்ஜிஆர், ஜெ., ஆன்மா மன்னிக்காது”- சி.வி.சண்முகம்

 

தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவிகளை பறித்த நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய சி.வி.சண்முகம், “என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுதோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்று விட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தவெக தயாராக இருந்தது. தேர்தலுக்கு கடைசி நேரத்தில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. தவெக முன்வந்தபோது அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. இபிஎஸ் பொதுச்செயலாளராக கடந்த 4 ஆண்டுகளாக செய்த ஒரே வேலை கட்சியிலிருந்து பல பேரை நீக்குவதுதான். அவர் நீக்கியவர்கள் அனைவரும் இன்று பேரவையில் உறுப்பினராக உள்ளனர். ஒற்றை தலைமை வேண்டும் என நாங்கள்தான் முடிவு எடுத்தோம். அதற்கான தண்டனையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். சுயமாக அவர் ஒன்றும் பொதுச் செயலாளராகவில்லை. நாங்கள்தான் இபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தோம். இபிஎஸ் எங்களை நீக்கியது செல்லாது. எங்களை நீக்கும் முன் எங்களிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கேட்டாரா? 

எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கிய பாவத்தை தற்போது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு தேர்தல் அதிமுகவை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார்.திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்த எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. பதவி ஆசை எடப்பாடி பழனிசாமியின் கண்ணை மறைத்துவிட்டது, தாம்தான் முதலமைச்சாரவேன் என எடப்பாடி கூறியதை நாங்க ஏற்கவில்லை. திருமாவளவன் முதலமைச்சராக வேண்டும் என்று வலியுறுத்தினோம், எடப்பாடி மறுத்துவிட்டார், பொதுச்செயலாளரின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது, எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடிக்கு இல்லை” என்றார்.