ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 8 கார்கள்! ரூ.147 கோடிக்கு சொத்து... வாய் பிளக்க வைக்கும் அதிமுக வேட்பாளரின் சொத்து பட்டியல்
சிங்காநல்லூா் அதிமுகவின் சிட்டிங் எம்எல்ஏ கே.ஆா். ஜெயராம் சொத்து மதிப்பு ரூ.147 கோடி என பிராமான பத்திரத்தில் காட்டியுள்ளார். இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட 50 கோடி கூடுதலாக இந்த முறை சொத்து மதிப்பு காட்டியுள்ளார்.
சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராம் தனது பிரமாண பத்திரத்தில், தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது தன்னிடம் ரூ.12.68 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.75.74 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகளும் 3 கார்களும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிடும் கே.ஆர்.ஜெயராம் தன்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 8 கார்களும், மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.59.85 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும், ரூ.66.54 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.