×

பேனா சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ₹80 கோடியில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது. சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் அருகில் நிறுவப்படவுள்ள பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான சுற்றுச்சுழல் அறிக்கை மற்றும் செயல்டுத்துவது குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையினை அலுவலக நேரத்தில் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகத்தில்  சமீபத்தில் வைக்கப்பட்டு கருத்து கேட்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா சின்னத்துக்கு எதிரான வழக்கை மார்ச் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கூறப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மனு மீது மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக  ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  தொடர்ந்த வழக்கில்   நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில்  கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்றும்,  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.