×

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதவ் அர்ஜுனா சவால்..!!

 

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில், தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், " தமிழகத்தில் 60 வருட அரசியலை மாற்றி அமைத்து இருக்கிறோம். 80 நாள்களாக தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். அதுதான் குதிரை பேர வழக்கு.

கொளத்தூருக்கு ஒரே முறைதான் தவெக தலைவர் விஜய் சென்றார். ஆனால் சேப்பாக்கம் செல்லாமல் விட்டுவிட்டார். இனிமேல் திமுக குடும்பத்தில் இருந்து யாரும் முதலமைச்சர் ஆக முடியாது. வாயை திறங்க சி.எம். என்று பேட்ச் குத்திட்டு வந்தார்கள். முதலமைச்சர் விஜய் பேச எழுந்ததும் ஓடிவிட்டார்கள். திமுக தோல்விக்கு காரணமாக ஆதிக்க மனப்பான்மைதான் காரணம்.

பொதுப்பணித் துறை, விளையாட்டுத் துறை ஆகியவை எனது துறைகள். அந்த துறைகளில் 2028ஆம் ஆண்டு வரை டெண்டர் விட்டுவிட்டு சென்று விட்டார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று முடிவு செய்துவிட்டார்கள்.

எம்ஜிஆர் இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர். அதுபோல தவெக தலைவர் விஜய் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது. கடலில் இருந்து தரையில் எடுத்து போட்ட மீனைப்போல திமுக இன்னும் 6 மாதம் துள்ளும்.

இப்பொழுது சேப்பாக்கம் தொகுதியில் தேர்தலில் நடத்தினால் உதயநிதி ஸ்டாலினை டெபாசிட் இழப்பார். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடத் தயாரா? நாங்கள் சாதாரண பெண்ணை நிறுத்தி சேப்பாக்கத்தில் வெற்றி பெற வைக்க முடியும்.‌ எங்கள் தலைவர் ஒரே ஒரு முறை பிரச்சாரம் செய்தால் போதும்.

ஒரு‌ பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இடத்தில் இருந்து கொண்டு இப்படி பேசுவதா? முன்பு, காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது யார் திமுக ஆட்சி தானே.

கடந்த 10 ஆண்டுகளாக மழை இருந்தது. காவிரி பிரச்சனை இல்லை. இந்த ஆண்டு மழை இல்லை; அதனால் பிரச்சனை. இப்பவும் 3500 கன அடி தண்ணீர் 15 நாள் திறக்க உத்தரவு வந்தது. இந்த நிலையில் மழை வந்து தண்ணீர் வந்தது.

காவிரி பிரச்சனையை வைத்து இரு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல முடிவு செய்தார். சகோதரத்துவத்தை வளர்க்க தான் முதலமைச்சர் அங்க செல்ல முடிவு செய்தார்.

ஆட்சியைக் கவிழ்த்தாலும் பரவாயில்லை. மூன்று மாதத்தில் தேர்தல் வரும்.‌ 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம். ஏன் பயப்பட வேண்டும் என்று எங்கள் தலைவர் சொல்வார். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி வெற்றி பெற்றதற்கு காரணம் அங்குள்ள இஸ்லாமியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரால்தான். இனிமேல் அவர்களால் சேப்பாக்கம், திருவாரூரில் நிற்க முடியாது" என்றார்.