×

“பாஜக உடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது”- கஸ்தூரி

 

பாஜக உடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது எனவும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டு தேவையற்ற எதிர்ப்பை விஜய் வாங்கிக் கொள்ள மாட்டார் என்பதே தனது நம்பிக்கை எனவும் பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகியும் பிரபல நடிகையுமான கஸ்தூரி, “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுகிறார்கள் என்பதே நல்ல விஷயம் அதில் குறைகள் ஏதேனும் இருந்தாலும் இது புதிய ஆட்சி. சென்னை திருவொற்றியூரில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டாலும் அங்குள்ள தெருக்களையே குடிமக்கள் கடையாக மாற்றியது. அனைத்திற்கும் அரசையே எதிர்பார்க்காமல் மக்களையும் மாற்ற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களை மாற்றி விட்டனர். விஜய் ஆட்சியில் எண்ணம் இருக்கிறது, ஆனால் அதற்கான செயல்பாட்டிற்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். இதேபோல் ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவது கிடையாது. கடைசி கட்டத்தில் இருப்பவர்களை மாற்றுவதற்கான கட்டமைப்பு விஜய்க்கு இப்போதைக்கு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அனைவரும் புதியவர்கள், பதவியேற்க வரும் பொழுது கூட வெற்றிச் சான்றிதழை அமைச்சர் கீர்த்தனா மறந்து விட்டு வந்தார். 

திமுக தோற்றாலும் நடப்பது திமுக ஆட்சி தான் என எதிர்க்கட்சி தலைவர்  உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். இது குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதைப் போல்  உள்ளது. தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உதயநிதி கதறுவதை நாம் கேட்டு பார்த்து ரசிக்கலாம், அதற்காகவே நான் விஜய்க்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன். தவெக எதிர்பாராத வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வெற்றியை பறிகொடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களிடம் செல்வது என்பது சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம். அதிமுக அதிகாரத்திற்கு வரும்பொழுது மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவை தேடி ஓடி வருவார்கள். இதேபோல் தற்போது தவெக ட்ரெண்டிங்கில் இருப்பதால் அந்தக் கட்சிக்கு அனைவரும் வருகிறார்கள். அதேவேளையில் தவெகவிற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்களை விட்டு சென்று விடுவார்கள் என்பதால் அரசியலில் வியாபாரிகளும் சந்தர்ப்பவாதிகளும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தான் தவெகவின் வெற்றி அடங்கியிருக்கிறது. பாஜக உடன் இணக்கமாக செல்வதே விஜய்க்கு நல்லது, மத்திய அரசை எதிர்த்துக்கொண்டு தேவையற்ற எதிர்ப்பை விஜய் வாங்கிக் கொள்ள மாட்டார் என்பதே எனது நம்பிக்கை” என்றார்.