"எழுதி கொடுத்ததை அப்படியே பேசிய விஜய், புஸ்ஸி ஆனந்த் பற்றி பேசவில்லை”- கஸ்தூரி
தமிழகத்தில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசி தான் அனைவரும் அரசியல் செய்யும் சூழல் உள்ளது என பாஜக நிர்வாகியும் நடிகையுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்து முஸ்லீம் நல்லிணக்கத்தோடு இருப்பது ஆம்பூர் நகரில் கண்கூடாக பார்த்தேன்.தேவையில்லாமல் இந்துவுக்கும் முஸ்லிம்களிடையே பிரிவினியை ஏற்படுத்துவது திமுக தான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அங்குள்ள இந்து முஸ்லிம் மக்கள் இத்தனை ஆண்டு காலமாக கண்டுகொள்ளாத நிலையில் அரசியலுக்காக திமுக அரசு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மூன்று முறை நீதிமன்ற தீர்ப்பை மீறிய இந்து விரோத திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நேற்று நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பின் விவகாரம் ஒரு முறை அல்ல பலமுறை இது போன்று நடந்துள்ளது. தமிழக அரசு இந்து பண்டிகைகள் மற்றும் இந்து கோயில்களுக்கு ஏதோ ஒரு வகையில் செயல்பாடுகளை எடுக்காமல் எதிர்வினை ஆற்றுகிறது.
நேர்மையாக எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு நீதியரசரை தனிப்பட்ட முறையில் தாக்கும் திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி அரசுகள் தொடர்ந்து அவர் மீது அவதூறு பரப்பி வருவதன் மர்மம் என்ன? நீதியரசர் சுவாமிநாதனுக்கு எதிராக மதுரையில் தேச விரதோஷ சக்திகள் சோசியல் மீடியா மூலம் மிரட்டல் விடுக்கும் வகையில் அவரை பொதுவெளியில் அவதூறு பரப்பி வருவதால் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு இசட் பாதுகாப்பு உடனடியாக வழங்க வேண்டும்.தமிழக மக்களின் மன ஓட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் அறிந்திருந்தாலும் மீசையில் மண் ஓட்டாதது போல் தான் அவர் தற்போது பேசி வருகிறார். தமிழக மக்கள் மட்டுமல்லாமல் திமுக வாக்கு வங்கியே அவருக்கு எதிராக திமுக அரசின் மீது மனம் நொந்து அதிருப்தியில் உள்ளனர். ஆகையால் வருகின்ற 2026 தேர்தலில் திமுக அரசு எதிர்க்கட்சி ஆக வேண்டுமானாலும் வெற்றியை கொண்டாடலாம், ஆனால் ஆட்சி அமைக்க முடியாது. புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்கவில்லை என தவெக தலைவர் விஜய் எழுதி கொடுத்ததை படித்துள்ளார். ஆகையால் அவரை சொல்லி குற்றமில்லை, எழுதிக் கொடுத்தவர்கள் இன்னும் கொஞ்சம் தயாரித்துக் கொடுத்திருக்கலாம். புதுச்சேரி அரசு தற்போது ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களுக்கு பதிலாக பணமாக கொடுத்து வருகிறது, அது அவருக்கு தெரியவில்லை பட்டிமன்றம் போல் எழுதிக் கொடுத்ததை படித்து வருகிறார். மேலும் பாண்டிச்சேரி சிறப்பு எல்லாம் பேசி வந்த விஜய் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் சிறப்பை ஏன் பேசவில்லை என்று புரியவில்லை. தமிழகத்தில் எம்ஜிஆரை புகழ்ந்து பேசி தான் அனைவரும் அரசியல் செய்யும் சூழல் உள்ளது. அந்த வகையில் விஜய் எம்ஜிஆர் ரோடு ஒப்பிட்டு பேசுவது அவருடைய பர்பாமென்ஸ் தான். ஆனால் பாண்டிச்சேரியில் அதிமுக எம் ஜி ஆர் காலத்தில் வெற்றி பெறுவதற்கு முன்பே திண்டுக்கல்லில் மாயதேவரை எம் ஜி ஆர் வெற்றி பெற செய்தார். அந்த வரலாற்றை மறந்த விஜய் தற்போது ஈரோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெகவுக்கு வாய்ப்பு இருந்தும் ஏன் போட்டியிடவில்லை?” என கேள்வி எழுப்பினர்.