×

“திருவள்ளூர் தவெக வேட்பாளர் எனக்கு கருக்கலைப்பு செய்தார்”- நடிகை சாந்தினி பரபரப்பு 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஆதரவாக சட்டவிரோத கருக்கலைப்பு புகாரில் திருவள்ளூர் தவெக வேட்பாளர் மருத்துவர் அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை சாந்தினி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார்.

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மருத்துவர் அருண்குமார் மீது, 'நாடோடிகள்' பட நடிகை சாந்தினி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஏற்கனவே நடிகை சாந்தினி அளித்த புகார் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மருத்துவர் அருண்குமார் மீதும் அவர் ஒரு புகாரை அளித்திருந்தார். அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் 6வது முறையாக நடிகை சாந்தினி மீண்டும் இன்று புகார் மனுவை அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை சாந்தனி, நான் கருவுற்றிருந்த போது, குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாகக் கூறி மணிகண்டனும், மருத்துவர் அருண்குமாரும் எனக்கு கருக்கலைப்பு செய்தனர். ஆனால், வழக்கு பதியப்பட்ட பிறகு கிடைத்த மருத்துவத் தகவல்களைப் பார்த்தபோதுதான், குழந்தை ஆரோக்கியமாக இருந்ததும், அவர்கள் என்னிடம் பொய் கூறி சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாகச் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட மருத்துவர் அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். தனக்கு அளித்த வாக்குறுதியின் படி இழப்பீட்டை மணிகண்டன் தர மறுப்பதாகவும், 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும், இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த டாக்டர் அருண்குமார் மீது நடவடிக்கையும் எடுக்க மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மாநில மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காமல், உரிய பதிலையும் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் தேசிய மகளிர் ஆணையத்தை அணுகப் போவதாக தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய மருத்துவர் அருண்குமார் தான் தற்போது திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்று சாந்தினி குறிப்பிட்டுள்ளார்.