நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு - ஓபிஎஸ் இரங்கல்!!
பழம்பெரும் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ""வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அடி எடுத்து வைத்த பழம்பெரும் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகிய ஜாம்பவான்கள் தமிழ் திரை உலகில் கொடி கட்டி பறந்த காலத்திலேயே தமிழ் திரை உலகில் முன்னணி திரைப்பட நடிகராக வலம் வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் நடித்த மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், தங்கப்பதக்கம் போன்ற திரைப்படங்கள் இன்றளவிலும் ,மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. கதாநாயகன், வில்லன் உட்பட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து திரைப்படத்துறையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.