“முதல் மனைவியை கொலை செய்துவிட்டு நான் ஜெயிலுக்கு சென்று களி திங்க முடியாது”- சித்தப்பு சரவணன் பரபரப்பு பேட்டி
என் உயிருக்கு எந்த ஆபத்து வந்தாலும் அதற்கு நடிகர் சரவணன் தான் காரணம் என முதல் மனைவி போலீசில் புகார் அளி்த்த நிலையில், அவர் பொய்யான புகார் அளித்திருப்பதாக 2வது மனைவியுடன் வந்து விளக்கம் அளித்துள்ளார் சித்தப்பு சரவணன். இருவரின் புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தில் சித்தப்பு கதாபாத்திரம் மூலம் அறியப்பட்ட சரவணன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் போரூர் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த சூழலில் சித்தப்பு சரவணன் மீது அவரது முதல் மனைவி மவுலிவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், “வீட்டில் இருக்கும் சிசிடிவி கேமராவை நடிகர் சரவணன் ஆளை வைத்து அகற்றிவிட்டார். என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கும், எனது உடைமைகளுக்கும் எது நடந்தாலும் சரவணன் மட்டும்தான் பொறுப்பு. முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் இன்னொரு திருமணம் செய்தது குறித்தும் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இப்புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், நடிகர் சரவணன், தனது 2வது மனைவி ஸ்ரீதேவி மற்றும் 9 வயது மகன் ஆகியோருடன், தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாக கூறி, முதல் மனைவி சூர்யாஸ்ரீ மீது மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், “12 ஆண்டுகளாக அவருடன் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைச்சதே அவங்க தான்.. என்னால அவங்க உயிருக்கு எந்த பிரச்சனையும் வராது.. பணம் வாங்குவது தான் அவர்கள் நோக்கம். எனக்குதான் அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார்.முதல் மனைவியை கொலை செய்துவிட்டு நான் ஜெயிலுக்கு சென்று களி திங்க முடியாது. அமைதியான வாழ்க்கை வாழணும்னு ஆசைப்படுறேன்.. 12 வருஷமா பேசாம முதல் மனைவி இப்போ ஏன் பேசணும்..? என்கிட்ட இருக்க பணத்தை அபகரிக்க தான் இப்படி பண்றாங்க” எனக் குற்றன்சாட்டினார்.