×

 அதிக வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிக்கு விருது..- ‘Super Tax Payer’ என்று தமிழிசை புகழாரம்..

 

வருமான வரி தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிலேயே அதிக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு  விருது வழங்கப்பட்டது.

 இந்தியாவில் கடந்த 1860 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தான் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  இந்தியாவின்  முதல் நிதியமைச்சராக பதவி வகித்த  சர் ஜேம்ஸ் வில்சன், இதனை அறிமுகம் செய்தார். முதன்முதலில் வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட அப்போது அரசுக்கு ரூ.30 லட்சம் வருமானம் கிடைத்தது. சுமார் 157 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இந்தியாவில் வருமான வரி ரூ.10 லட்சம் கோடியாக வளர்ந்து நிற்கிறது.  வருமான வரி அறிமுகம் செய்யப்பட்ட ஜூலை 24 ஆம் தேதி ஆண்டுதோறும் வருமான வரி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  ஆண்டுதோறும் வருமான வரித்துறை சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு அதிக வரி செலுத்தியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு  வருகிறது.  

 வருமான வரி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  அந்தவகையில்    சென்னையில்  நேற்று  டிடிகே சாலையில் உள்ள இசை அகாடமியில் வருமான வரி விழா நடைபெற்றது.  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்த விழாவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வருமான வரி  செலுத்தியதற்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த்  சார்பாக அவரது இளைய மகள் சௌந்தர்யா விருதினை பெற்றுக்கொண்டார்.  ஆளுநர் தமிழிசை சௌவுந்திரராஜன் விருது வழங்கி கவுரவித்தார்.  அப்போது பேசிய தமிழிசை, “ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல; Super Tax Payer” என்று  பாராட்டினார். மேலும், பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால், பொதுமக்கள் முறையாக வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும்,  அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு வரி செலுத்த வேண்டும், இல்லையென்றால்  நாம் இருப்பதையும் இழந்துவிடுவோம்” என்று கூறினார்.