நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி..!
திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்.அதற்காக மனுத் தாக்கல் செய்த போது அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளிலும் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். யாரும் வாய்ப்பு தராததால் தனித்துப் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் லால்குடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஊரணி பகுதிக்குச் சென்ற அவர், அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களது துணிகளைத் துவைத்துக் கொடுத்து வாக்குக் கேட்டார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்துப் போட்டியிடுவது தனது வழக்கம் என்று கூறிய அவர், லால்குடி தொகுதியை ஒரு புண்ணிய பூமியாகவும், பாரம்பரியமிக்கத் தலைவர்கள் நடமாடிய மண்ணாகவும் வர்ணித்துப் பேசினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே தனது முக்கிய நோக்கம் எனத் தெரிவித்த அவர், இப்பகுதி விவசாயிகளின் நீண்டகாலக் கனவான வாழை மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பேன் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் லால்குடி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இதன் காரணமாக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (சிகிச்சை பெற்று வருகிறார்.