அரசியலில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி நடிகர் தனுஷ்..! 234 தொகுதிகளுக்கும் நற்பணி இயக்கத்தை விரிவுபடுத்த முடிவு..!
நடிகர் தனுஷ் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒரு அரசியல் கட்சியை அறிவிக்கவில்லை என்றாலும், தனது ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என மாற்றி, தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் தனுஷின் ரசிகர் மன்றம் முறைப்படி நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ஆம் தேதி சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் அணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அடிமட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கிளைகள் இல்லாத பகுதிகளில் புதிய அலகுகளைத் தொடங்கவும், மகளிர் அணியைப் பலப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு தனுஷ் அறிவுறுத்தியுள்ளதாக இயக்க வட்டாரங்கள் கூறுகின்றன.
தனுஷ் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாதபோதிலும், 2027 உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இயக்க வட்டாரங்களில் ஆலோசனைகள் நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2031 சட்டமன்றத் தேர்தல் வரை காத்திருக்காமல், உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் அமைப்பைக் கட்டமைக்கவும் கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும் முடியும் என நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளன.
தற்போது மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாகப் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும், பெண் ஆதரவாளர்களை இயக்கத்தில் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இயக்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்துத் தமிழக அரசியல் வட்டாரங்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றன.