×

"வரலாறு படைத்தாய் நண்பா!" - விஜய்க்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து

 

சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில்,  நடிகர், நடிகைகள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக  1 கோடிக்கும் மேல் வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 

இந்நிலையில் நடிகர், நடிகைகள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அதன்படி, நடிகர் விக்ரம்,  வாழ்த்துகள் நண்பா... இன்று வரலாறு படைத்தீர்கள்” என விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், “முதல் தேர்தலில்யே மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு வாழ்த்துகள். நீங்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். இதேபோல் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, “வரலாறு காணாத சாதனை படைத்து கொண்டிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். “Wow..!!! This is HISTORIC…!!!” என விஜய்க்கு  இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து கூறியுள்ளார்.

 


விஜய்க்கு X தளத்தில் வாழ்த்து கூறியுள்ள காஜல் அகர்வால், “நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்னா மாறி", இன்று, மக்கள் முழு நம்பிக்கையுடன் அதை மீண்டும் எதிரொலித்துள்ளனர். விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்! இந்தத் தருணம் உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அசைக்க முடியாத அன்புக்கும் ஒரு உண்மையான சான்றாகும். தமிழக மக்கள் உரக்க, தெளிவாக, மிகுந்த பெருமையுடன் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது வெறும் வெற்றி மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுடன் ஏற்பட்ட ஆழமான, வலிமையான பிணைப்பின் கொண்டாட்டமாகும். இந்த எழுச்சியூட்டும் புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, ​​உங்களுக்கு மிகுந்த வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம். பலரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வருவீர்களாக. இந்த மகத்தான சாதனைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!” எனக் கூறியுள்ளார்.

 


“தமிழர்களின் வாழ்வில் மாற்றம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தவெக தலைவர் விஜய்க்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து கூறியுள்ளார். இதேபோல் “என் தளபதி வெற்றி கொண்டார்” என தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சந்தீப் கிஷன் வாழ்த்து  தெரிவித்து பதிவிட்டுள்ளார். நடிகை கன்னிகா, "Time for change has come..." எனக் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக் கூறியுள்ள சந்தோஷ் நாராயணன், “தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்... நான் பிறந்ததிலிருந்து திராவிடக் கட்சிகள் தங்களுக்குள் வாக்குகளைப் பிரித்துக் கொள்வதை மட்டுமே பார்த்திருக்கிறேன். இது மிகவும் வரவேற்கதக்க ஒரு மாற்றம்” எனக் கூறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் சிபி சத்தியராஜ் தனது எக்ஸ் தளத்தில், “"கூட்டம் ஒட்டா மாறாது" -மாறிடுச்சு! "ஒட்டு சீட்டா மாறாது " -மாறிடுச்சு! “நடிகன் நாடாள முடியாது" -ஆளப்போகிறார் "அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் " -வாய்ப்பில்லை ராஜா "அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?" -பாக்க தானே போறீங்க "விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது”.. -எவராலும் விஜய் ஆக முடியாது! 

விஜய் அண்ணா, அபாரமான திறமை, கடின உழைப்பு, பேரார்வம், ஒழுக்கம், அசைக்க முடியாத கவனம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றால் உங்கள் தொழில் வாழ்க்கையின் உச்சத்தை அடைந்தீர்கள். ஆனாலும், உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றி அரசியலில் இறங்க முடிவு செய்தீர்கள். அதே குணங்களாலும், உங்கள் மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தூய நோக்கத்தாலும் இப்போது நீங்கள் சரித்திரம் படைத்துள்ளீர்கள். கூட்டணிகள் விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் சந்தித்த அனைத்து சிரமங்களையும் மீறி உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றீர்கள். அண்ணா, நீங்கள் திரையில் பலரைத் துவம்சம் செய்வதைப் பார்த்து நாங்கள் விசில் அடித்தோம், இப்போது அதை அரசியலிலும் மெய்ப்பித்துள்ளீர்கள். உங்கள் ரசிகர்களையும் ஆதரவாளர்களையும் பெருமைப்படுத்தி, உங்கள் தனித்துவமான பாணியில் அனைத்து எதிர்மறைப் பேச்சாளர்களின் வாயையும் அடைத்துள்ளீர்கள். இறுதியாக, மக்கள் பணத்திற்காக அல்ல, உண்மைக்காகவே வாக்களிக்கிறார்கள் என்பதை நிரூபித்து தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நன்றி தலைவா. உங்கள் அனைவருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

தமிழ்நாட்டின் மைந்தன் எழுகிறார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.