☰
×

இயற்கையை காக்க அதிரடி நடவடிக்கை! கொல்லிமலையில் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலுமாக தடை: மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்!

 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளாஸ்டிக் தடை

கொல்லிமலை பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும். பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வினியோகித்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தீவிரமாக அமல்படுத்தப்படும். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வினியோகித்து, விற்பனை செய்தால் முதல் முறை ரூ.25 ஆயிரம். 2-வது முறை ரூ.50 ஆயிரம், 3-வது முறை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

பெரிய வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையும், மளிகை மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், சிறு வணிகர்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரையும் படிப்படியாக அபராதம் விதிக்கப்படும்.

கொல்லிமலைக்கு செல்லும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் தடையை பின்பற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது