×

60 அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை.. முக்கிய ஆவணங்கள், ரூ. 33.75 லட்சம் பறிமுதல்..

 

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 60 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.  33.75 லட்சம்  ரொக்கம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் சிலவற்றில் முறைகேடு நடப்பதாக வந்த தகவலின் பெயரில் இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மாவட்ட ஆய்வுக்குழுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலக பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்து துறை, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வு பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வணிகவரித்துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சி மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் சார்ந்த 60 அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.  33லட்சத்து 75 ஆயிரத்து  773 ரொக்கம் கைப்பற்றப்பட்டது.  குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத 1,79,000 ரூபாய் கூகுள் பே மூலம் தனிநபருக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதும் இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தெற்கு அலுவலகத்தில் மின் சேவைக்கு கட்டணம் வசூல் செய்த கணக்கில் பணக்குறைப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடலூரில் மாநகராட்சி அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில் மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே கடலூர் நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 அங்கு , அரசாங்க அலுவலகத்தில் செய்ய வேண்டிய பணிகள் தனியார் நிறுவனங்களில் நடைபெற்று வருவதும்,  அரசு ஆவணங்கள் தனியார் வாசம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த தனியார் கட்டிடத்தில் இருந்து பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவற்றை போல சில முறைகேடுகள் இன்று நடத்தப்பட்ட தில் சோதனையில் கண்டறியப்பட்டு முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது.