×

கொசு ஒழிப்பு தொடர்பான புகார்கள் மீது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

 

தண்ணீர் தேங்கி இருப்பது, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட கோரி கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், கொசுக்கள் பெருக்கம் காரணமாக மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மழை நீர் வடிகால்கள், காலியிடங்கள், கட்டுமான பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவதால், மழை நீர் வடிகால்கள் காலியிடங்கள் கட்டுமான பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தண்ணீர் தேங்கும் மற்றும் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை அடையாளம் காண நான்கு வாரங்களுக்குள் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகள் மற்றும் சுகாதாரத் துறை ஆகியவற்றுக்கு உத்தரவிட்டது. 

அனைத்து கட்டுமானப் பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து, கட்டட இடிபாடுகளை அகற்றி, தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதார விதிகளை மீறும் கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொசு உற்பத்தி அதிகமுள்ள பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவது கழிவு நீரை அப்புறப்படுத்துவது மற்றும் கொசு விரட்டும் புகைபோடும் நடவடிக்கை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும், தண்ணீர் தேங்கி இருப்பது குறித்தும், கொசு ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் புகார் தெரிவிக்க இலவச உதவி எண் உள்ளிட்ட குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ள தலைமை நீதிபதி அமர்வு, உதவி எண்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசின் இந்த நடவடிக்கைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டதுடன்,  பொதுமக்களும் தங்கள் வீடுகளிலும், பூந்தொட்டிகள், மேற்கூரைகள் ஆகியவற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்தும் வகையில், இதன் நகலை தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைக்கும்படி பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.