×

அவையில் வீடியோ எடுத்த விவகாரம்- ஆளுநர் விருந்தினர் மீது நடவடிக்கை? 

 

ஆளுநர் விருந்தினர்களில் ஒருவர் பேரவை நிகழ்வுகளை செல்போனில் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக அவை உரிமை குழு கூட்டம் நடைபெற்றது.

கடந்த 9-ஆம் தேதி ஆளுநர் உரை நிகழ்ந்து கொண்டிருக்கும்போது  விருத்தினர் மாடத்தில்  இருந்த ஆளுநர் விருந்தினர் ஒருவர் அவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்தார் என்றும், இதில் அவை உரிமை மீறல் உள்ளதால், இதை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா  பேரவை கூட்டத்தொடரில் வலியுறுத்தினார்.

இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாக கருதி இதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை  குழுவிற்கு உத்தரவிடப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த நிலையில் அவை உரிமைக்குழு கூட்டம் துணை சபாநாயர் பிச்சாண்டி தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் அன்று பணியில் இருந்த அவை காவலர்கள், நேரில் பார்த்த அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்றது.  சட்டமன்ற நிகழ்வுகளை விதிகளை மீறி வீடியோ எடுத்த நபரிடம் விசாரிப்பது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அவை உரிமை குழு  தலைவரும்,  துணை சபாநாயகருமான பிச்சாண்டி உள்ளார். இந்த குழுவில் உறுப்பினர்களாக  அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ. கருணாநிதி, சிவகுமார் உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் உள்ளனர் ‌.இன்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொள்ளாட்சி ஜெயராமன், இனிகோ இருதயராஜ், ஈஸ்வரப்பன், இ.கருணாநிதி, நல்லதம்பி, பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.