×

விஜய்க்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 வாக்குகள் கன்பார்ம்- ஏ.சி.சண்முகம்

 

ஒவ்வொரு தொகுதியிலும் 25,000 முதல் 50,000 வாக்குகளை விஜய் பெறுவார், வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் மண்டபத்தில் ஓசூர் அனைத்து முதலியார் முன்னேற்ற நல சங்கம் சார்பில் குடும்ப விழா நடைபெற்றது. இதில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் அவர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த A.C சண்முகம், “ஒரு வாக்காளர் பத்து முதல் 20 வாக்குகளை வைத்திருப்பதும், மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்காமல் இருப்பதுமாக உள்ளது. எஸ்ஐஆர்-ஐ வரவேற்கிறோம், ஒருவருக்கு ஒரு வாக்கு என்கிற ஜனநாயகம் தொடர வேண்டும் புதிய நீதி கட்சியை பொறுத்த வரை வாஜ்பாய் காலம் முதல் அவர் தொடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்ந்து வருகிறோம். 26 ஆண்டுகளாக வாஜ்பாய் பிரதமர் முதல் மோடி பிரதமர் வரை புதிய நீதி கட்சி பிஜேபியுடன் தொடர்கிறது. ஏசி சண்முகம் ஆகிய நான் சட்டமன்றத் தேர்தலிலோ வரும் தேர்தலிலோ போட்டியிட விருப்பமில்லை. புதிய நீதி கட்சியின் சார்பாக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.


தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறார்கள். எம்ஜிஆர் அவர்கள் இருந்த போது தான் மூன்று முறை அதிமுக ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் மக்கள் மாறி மாறி இந்த கட்சிகளை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் ஆவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது போல தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும். தமிழகத்தில் மும்முனை போட்டியாக தெரிந்தாலும் கூட அதிமுக எளிதாக ஆட்சி அமைத்து விடும். நான் ஒரு கருத்தை வலிமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் விஜய்க்கும் தவெகவிற்கும் வாக்கு வங்கி உள்ளது. அது பணம் கொடுத்தோ வேறு எந்த நிலையிலும் பறிக்க முடியாது. விஜய்க்கு ஒவ்வொரு தொகுதியிலும் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் உள்ளது. வலுவான வேட்பாளர் போட்டியிட்டால் வெற்றி பெறலாம்” என தெரிவித்தார்