×

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு- தவெக தீர்மானம் 

 

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்

சில மாநிலங்களில் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகையில்,  மத்திய அரசை காரணம் காட்டி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்கும் மாநில அரசுக்கு எதிர்ப்பு

மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு செய்யப்படும் என்று கூறிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசுக்கு கண்டனம்

கால வரையறை நிர்ணயம் செய்து மது கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்

மாநிலத்திற்கான தன்னாட்சி உரிமை கோரும் எங்கள் கொள்கைப்படி. மருத்துவம் போலவே கல்வியும் மாநிலப் பட்டியலுக்கே உரிமையானது. அதன்படி, எங்கள் உரிமையை ஒன்றிய அரசு எங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும். அப்படி வழங்கினால், நீட் தேர்வை மாநில அரசே நீக்கிவிட்டு, எங்கள் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற இயலும். இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும், இந்த விசயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்துத் தமிழக மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசையும் இச்செயற்குழு எதிர்க்கிறது.

சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலைநாட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சமூக நீதியின் பாதையில் பயணிக்கிறோம் என்று திமுக அரசு கூறி வருவதை மக்கள் நம்ப மாட்டார்கள். ஒன்றிய அரசின் மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ள நினைக்கும் முயற்சி பலிக்காது. உண்மையான சமூக நீதியை நிலை நாட்டிட தமிழக அரசு முதலில் உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வைக் காலதாமதமின்றி உடனே நடத்த வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடு படுவோருக்குத் தண்டனை வழங்கும் தற்போதைய சட்டத்தை வலுவாக்கி, மேலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குப் பாரபட்சமின்றி , கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வாயிலாக உடனடியாகப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளைத் தீர்க்கமாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

கள்ளச் சாராய விற்பனை, இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப் பொருட்களின் பழக்கம் போன்ற நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்யாமல் , மக்கள் நலனைக் காட்டிலும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனிலேயே அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஆளும் திமுக அரசுக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவிக்கிறது.


இலங்கை தொடர்பான விசயங்களில், தமிழக அரசைக் கலந்தாலோசித்து வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும். ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது. நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது.

தீவுக் கூட்டங்கள் கொண்ட கடற்பகுதியைக் கொண்ட நாடுகள். தங்களது மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காத்துக்கொள்ள, ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டி உள்ளது. அது மட்டுமின்றி, மீனவர்கள் கடல் எல்லைகளைத் தாண்டி மீன் பிடித்தலை மனிதாபிமானச் சிக்கலாகவே பார்க்க வேண்டும். அவர்களைக் கைது செய்யவோ சிறைப்படுத்தவோ கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதை இலங்கை அரசும் கடைப்பிடிக்கவில்லை. இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தவில்லை. இங்குள்ள மாநில அரசும் இதனைச் சுட்டிக் காட்டிக் கேள்வி எழுப்பவில்லை.

தமிழக வெற்றிக் கழகம், இந்தச் சர்வதேசச் சட்டத்தை வலியுறுத்தி, மீனவர்களுடன் இணைந்து போராடும் என்பதை இச்செயற்குழு அறிவிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை. ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்.எல்.சி.க்காக நிலம் வழங்கிய நில உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு, இதுவரை யாருக்கெல்லாம் பணி வாய்ப்பு வழங்கவில்லையோ அவர்களுக்கும் நிரந்தரப் பணிவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு ஓர் அங்குலம் நிலத்தைக் கூடக் கையகப்படுத்தக் கூடாது என்று இச்செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை. கனிம வளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படும்.