இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா?- ஆதவ் அர்ஜூனா
கரும்பு உற்பத்தி 30 சதவீதமாக குறைந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆதவ் அர்ஜூனா, “நீங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. 5 வருடம் ஆட்சியிலிருந்த திமுக, 3 மாதத்தில் மட்டுமே ஆட்சியில் உள்ள தவெகவுடன் ஒப்பீடு செய்வது நியாயமா..? குறைந்தபட்ச ஆதரவு இல்லாமல் இன்றைக்கும் விவசாயிகள் கண்ணீரோடுதான் இருந்திருக்கிறார்கள். நாங்கள் உறுதியாக சொல்கிறோம். இந்த 5 ஆண்டு ஆட்சியை விவசாயிகளின் பொற்காலமாக எங்கள் முதலமைச்சர் விஜய் உருவாக்குவார். சொன்னதை செய்வார்.
தி.மு.க ஆட்சியில் கரும்பு விவசாயம் மிகவும் குறைந்துவிட்டது. கரும்பு சாகுபடி 30 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு தேவையான சர்க்கரை மகாராஷ்டிராவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையில் உள்ளோம். த.வெ.க ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக இருக்கும். மகாராஷ்டிராவில் கரும்புக்கு என்று கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயத்துக்கு தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டது. சொட்டு நீர் மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தினார்கள். அதன் வெளிபாடாக தான் கரும்பு விவசாயத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இதை போன்ற திட்டங்கள் கடந்த ஆட்சியில் உருவாக்கப்படவில்லை. முதலமைச்சர் விஜயின் திட்டங்கள் மூலம் கூடிய விரைவில் மகாராஷ்டிராவுக்கு நிகராக தமிழகமும் கரும்பு உற்பத்தியில் முன்னிலைக்கு வரும். இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிடும் வகையில் தரம் உயர்த்தவே ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.