“பேட்ச் வொர்க் பார்த்த இடங்களில் ஊழல்... அனைத்து நெடுஞ்சாலைகளில் கேமராக்கள்”- ஆதவ் அர்ஜூனா
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள சாலைகளில் அதிகம் புகார் வந்துள்ளதால் பராமரிப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “நம்ம சாலை செயலியை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள சாலைகளில் அதிகம் புகார் வந்துள்ளதால் பராமரிப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பேட்ச் வொர்க் பார்த்த இடங்களில் நடந்திருக்கும் ஊழல்கள் வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும். சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியை இணைக்கும் தொழில்தட விரைவுச்சாலை உருவாக்கப்படும். சென்னை கன்னியாகுமரி 8 வழிச் சாலை, சென்னை நுழைவு வழித்தடச் சந்திப்புகளை மேம்படுத்துதல், திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம்-செங்கல்பட்டு உயர்மட்டச் சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும். சென்ட்ரல், கத்திப்பாரா, கோயம்பேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கோண வழித்தடச் சாலை ரூ.400 கோடியில் அமைக்கப்படும். ரூ.500 கோடியில் கேமராக்கள் பொருத்தி சாலை விதிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விபத்துகளை தடுக்க அடுத்த ஆண்டு முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும். கேரளாவை போல தமிழ்நாட்டிலும் அனைத்து நெடுஞ்சாலைகளில் கேமராக்கள் பொருத்தப்படும். பெரம்பூர், வில்லிவாக்கம் தொகுதிகளில் புதிய பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமைக்கப்படும். பாரா ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளுக்காக சென்னையில் சிறப்பு மையம் அமைக்கப்படும். நேரு உள் விளையாட்டரங்கத்தில் ரூ.25 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.14 கோடியில் கரூர், கடலூர், குமரி மாவட்டங்களில் புதிய பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அமை்்கப்படும். விளையாட்டு உபகரண வங்கி ரூ.5.15 கோடியில் ஏற்படுத்தப்படும். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி, வெள்ளி வென்றால் ரூ.3 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.2 கோடியாக ஊக்கத்தொகை உயர்வு வழங்கப்படும். பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் வழங்கப்படும்” என்றார்.