”வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 1 கி.மீ தூரத்திற்கு கட்சி நிர்வாகிகள் இருக்கக்கூடாது! திமுக எங்களை அச்சுறுத்துகிறது”- ஆதவ் அர்ஜூனா
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தவெக அலுவலகத்தை எரிந்த உண்மையான நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தவெகவின் ஆதவ் அர்ஜூனா மனு அளித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வழக்கறிஞர் குழுவுடன் சந்தித்தார். நாளை தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜூனா, “வாக்கு எண்ணிக்கை அன்று எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது என தமிழ்நாடு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் அவர்களை சந்தித்து மனு அளித்து உள்ளோம். தவெக துறைமுகம் வேட்பாளர் அவர்களை அமைச்சர் சேகர்பாபு அவரது செல்போன் வைத்து தாக்க முயன்றார். அதன் காணொளி உள்ளது. அதை கொடுத்துள்ளோம். சைதாப்பேட்டையில் தவெக வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். அதே போல ஸ்ரீரங்கத்தில் தவெக தேர்தல் அலுலகம் எரிக்கப்பட்டுள்ளது தோல்வி பயத்தில் திமுக எங்களை அச்சுறுத்துகிறது.62 வாக்கு எண்ணும் மையங்களில் யார் ஏஜென்ட் ஆக உள்ளார்களே அவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி உள்ளோம்.
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் குறிப்பாக லயோலா கல்லூரி வெளியே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த கட்சி நிர்வாகிகளும் இருக்க கூடாது. ஏன் என்றால் அது பொதுமக்களுக்கு தான் பிரச்சனை ஏற்படுத்தும். வாக்கு எண்ணிக்கையின் போது உள்ளே இருக்கும் தகவலை வெளியே வந்து திமுகவினர் சொல்லி கலவரத்தை ஏற்படுத்த பார்ப்பார்கள். நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்,ஒவ்வொரு ரவுண்ட் முடிந்த பிறகு ரிசல்ட் கூற வேண்டும். postal vote ல் லெஜர் காப்பி இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து உள்ளோம். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.திருச்சி ஸ்ரீரங்கத்தில் தவெக அலுவலகத்தை ஏரிந்த உண்மையான நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா அவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் மாநில ஊழியர்களும் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்ற முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்வுகள் மூலம் அவர்கள் இப்படி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் அப்படியான சூழல் இல்லை, ஏற்கனவே மாநிலத்தில் உள்ள RO க்கள் தான் பணியில் உள்ளனர்” என்றார்.