"மக்களே இல்லாத கூட்டத்துக்கு எதற்கு அத்தனை போலீஸ்?"- ஆதவ் அர்ஜூனா
காவல் அதிகாரிகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என தவெக தேர்தல் மேலாண்மை குழு தலைவர் ஆதவ் அர்ஜூனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறையின் பாதுகாப்பின்மை, கலகம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜூனா, “நாளை திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை நோக்கி தலைவர் பிரசாரம் செல்லவிருக்கிறார். ஆனால், தலைவர் வேன் மீது ஏறி நின்று மக்களை பார்க்கக்கூடாது என்கின்றனர். எனில், அவர் பேசும் இடத்தில்தான் அத்தனை கூட்டமும் கூடும். இதைத்தான் நாங்கள் கரூர் விவகாரத்திலும் சிபிஐயிடம் கூறினோம். காவல் அதிகாரிகள் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நினைப்பில் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். ஜெயலலிதா மட்டும்தான் திமுகவுக்கு எதிரி. இப்போதைய அதிமுகவை திமுக எதிரியாக பார்க்கவில்லை. அதனால்தான் எங்களின் பிரசாரத்தில் புகுந்து ரவுடியிசம் செய்கிறார்கள். நேற்று வில்லிவாக்கத்தில் எங்கள் கூட்டத்துக்கு வந்த பெண்கள் மீது பாட்டில் எறிந்தது குடிகாரர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், அது திட்டமிட்ட தாக்குதல். அங்கே இன்னும் நிறைய பாட்டில்கள் இருந்தது. நாங்கள் சிசிடிவி ஆதாரத்தை கைப்பற்றிவிட்டோம். அதையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறோம்.
பெரம்பூரில் தலைவர் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் காவல்துறையினர் முறையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பு அளித்தனர். பெரம்பூரை முடித்துவிட்டு கொளத்தூருக்கு சென்றார். அங்கே RO அனுமதி கொடுத்த இடத்துக்கு செல்வதற்குள் அளவுக்கதிகமான பேருந்துகளை அந்த இடத்துக்குள் விட்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் வர சொல்லி நாங்கள் சொல்லவில்லை. தலைவரின் பிரசாரத்துக்காக நாங்கள் விளம்பரம் செய்யவில்லை. மக்கள் தன்னெழுச்சியாக தலைவரை பார்க்க வந்தனர். ஆனால், களத்தில் எந்த போலீஸூம் இல்லை. காலையில் ஸ்டாலின் அதே கொளத்தூரில் ரோடு ஷோ செய்தார். அதற்கு 2000 போலீசார் பாதுகாப்பு அளித்தனர். மக்களே இல்லாத கூட்டத்துக்கு எதற்கு அத்தனை போலீஸ்?" எனக் கேள்வி எழுப்பினார்.