×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆதார் வெரிபிகேஷன்..? தகுதியற்றவர்களுக்குத் தொகை நிறுத்தப்படும்..!

 

மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2000 ஆக உயர்த்தப்படும் என திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே வாக்குறுதி அளித்துள்ளன. இதனால் பெண்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  திமுக ஆட்சி தொடர்ந்தால் அதே பெயரில் திட்டம் நீடிக்கும். ஒருவேளை அதிமுக ஆட்சி அமைந்தால், இத்திட்டத்தின் பெயர் 'குல விளக்குத் திட்டம்' என மாற்றப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்து நலத்திட்டப் பயனாளிகளின் தரவுகளையும் ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் தகுதியற்றவர்களை மிக எளிதாக அரசு கண்டறியும்.  புதிய விதிகளின்படி, ஒருவர் ஒரு அரசு திட்டத்தில் உதவித்தொகை பெற்றால், மற்றொரு திட்டத்தில் பயன் பெற முடியாது. ஆதார் சரிபார்ப்பு மூலம் இது விண்ணப்பிக்கும் போதே கண்டுபிடிக்கப்படும்.  ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் அல்லது வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை போன்ற மாதாந்திர ரொக்கப்பணம் பெறும் திட்டங்களில் இருப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாது.  

தொழில் கடனுக்காக வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்திருந்தாலோ அல்லது வங்கிகளில் தொழில் கடன் பெற்றிருந்தாலோ, அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது. இதனை கடந்த முறையே ஆதார் வெரிபிகேஷன் வழியாகவே அரசு உறுதி செய்தது  மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்போது, அனைத்துத் தகுதி விதிகளையும் பூர்த்தி செய்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.  

தற்போது பயன்பெற்று வரும் 1.31 கோடி பெண்களின் தரவுகளும் மீண்டும் சரிபார்க்கப்படும். தகுதியற்றவர்கள் எனத் தெரியவந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திரத் தொகை உடனடியாக நிறுத்தப்படும்.  அரசின் நலத்திட்டங்கள் தகுதியான ஏழை எளிய பெண்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பதே இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு முறையின் முக்கிய நோக்கமாகும்.