×

பெண் வீட்டு எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் கடத்தல்! திருச்சியில் பரபரப்பு

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதல் கணவருடன் ஆட்டோவில் சென்ற இளம்பெண் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சித்தானந்தம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மருங்காபுரி ஒன்றியம் முடுக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்திரைவள்ளி ஆகியோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில்,மணப்பாறைக்கு வந்த அவர்கள், பின்னர் ஆட்டோவில் சித்தானந்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

அப்போது திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி பிரிவு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், ஆட்டோவை வழிமறித்த காரில் வந்த இளம்பெண்ணின் ்தந்தை மற்றும் அவரது உறவினர்கள், சித்திரை வள்ளியை குண்டுக்கட்டாக தூக்கி காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து கணவர் புகாரின் பேரில் வீட்டில் அடைத்து வைத்திருந்த  இளம்பெண்ணை மீட்ட போலீசார், சகோதரன் உள்பட 3 பேர் கைது செய்து மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.