×

திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! பரிதவிக்கும் 2 வயது குழந்தை

 

மேட்டூரில் திருமணமான 3 ஆண்டுகளில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலைய செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியை சேர்ந்த பூவிழி((27), இவருக்கும் மேட்டூர் ஆண்டிகவுண்டன் நகர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(32)என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோபாலகிருஷ்ணன் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூவிழிக்கும் அவரது கணவருக்கும்  தகராறு ஏற்பட்டு பூவிழி தனது தாய் வீட்டிற்கு கடந்த வாரம் சென்று விட்டார். இதனை அடுத்து நேற்று மாலை பூவிழியின் வீட்டிற்கு சென்ற கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் சமாதானம் பேசி வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலை இன்று காலை விட்டில் திடிரென பூவிழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பூவிழி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் பூவிழியின் பெற்றோர்கள் மேட்டூர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததால் தாங்க முடியாமல் தனது மகள் பூவிழி தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரரிக்கின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்கொலை குறித்து மேட்டூர் கோட்டாட்சியர் சுகுமார் விசாரணை செய்து வருகிறார்.