“CM SIR எங்க இருக்காரு? என் வீட்டுக்காரர போலீஸ் இழுத்துட்டு போயிட்டாங்க..”- தலைமைச் செயலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
புதிய அமைச்சர்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தபோது முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என தனது குழந்தையுடன் வந்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர்கள் தலைமை செயலகம் இன்றைய தினம் ஒவ்வொருவராக வருகை தந்து துறைரீதியான அதிகாரிகள், வாழ்த்து கூற வருபவர்களை சந்தித்தனர். இதனிடையே, சென்னை, தலைமை செயலத்திற்கு புதிய அமைச்சர்கள் வருகை தந்தபோது சென்னையை சேர்ந்த கிறிஸ்டல் என்கிற பெண் தலைமை செயலத்தில் அமைச்சர்கள் அறை அமைந்திருக்கும் பகுதிக்குள் தனது குழந்தை உடன் நுழைந்து, முதலமைச்சர் விஜய் எங்குள்ளா, அவரை பார்க்க வேண்டும் எனக் கூறி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்று காலை புதுக்கோட்டையை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தனது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்து தனது கணவரை அழைத்து சென்றுவிட்டதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய தன்னை போலீசார் தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறி தொடர்ந்து முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை, போலீசார் வெளியேற்ற முயற்சித்த போது, CM cell-ல் புகார் அளிக்க வந்தால் தன்னை தடுப்பதாகவும், நாய் மாதிரி நடத்துவதாகவும், நான் என்ன குற்றவாளியா ? குற்றவாளி போல் நடத்துகிறீர்கள்.. முதல்வரை சந்திக்க வேண்டும் விடுங்கள் எனக் கூறி வாக்குவாதம் மேற்கொண்டார்.
குறிப்பாக, முதலமைச்சர் தனி பிரிவில் புகார் அளித்தால், காவல்துறை அதிகாரி அபிஷேக் குப்தா உத்தரவில், தன் மீதே புதுக்கோட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை காவல்துறை எனது கணவரை காரணம் தெரிவிக்காமல் அழைத்து சென்றுள்ளனர். அதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்தால் போலீசார்கள் என்னை துன்புறுத்துகின்றனர். கணவரின் பாதுகாப்புக்காக, முதலமைச்சரை சந்தித்து முறையிட வந்துள்ளேன் என்றார். இதுகுறித்து தலைமை செயலக காவல்துறை தரப்பில் புதுக்கோட்டை காவல்துறையிடம் விசாரித்த போது, கிறிஸ்டில்லாவின் கணவர் முருகேசன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சுமார் 30 லட்சம் பணத்தை ஏமாற்றியுள்ளதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் அவரை விசாரணை செய்ய அழைத்துச் சென்று இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.