ரயிலில் இருந்து தவறி விழுந்து வடமாநில பெண் பலி! இதை அறியாமல் அந்த ரயிலிலேயே பயணம் செய்த கணவர்
மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மீக பயணம் சென்ற வடமாநில பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் சிராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாரோஷி குர்மி. இவர் தனது மனைவி லெட்சுமிராணி குர்மி(63) மற்றும் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டு வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டி எண் 16103 பாம்பன் விரைவு வண்டியில் ஏ1 கோச்சில் தனது குடும்பத்தாருடன் சென்றபோது ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கும் பேரளம் ரயில் நிலையத்திற்கும் இடையே பண்டாரவாடை என்ற இடத்தில் சென்ற்போது, லெட்சுமிராணி குர்மி(63) கழிப்பறைக்கு சென்றவர் வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து (25 மீட்டர் பள்ளத்தில்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதை அறியாத ரம்பாரோஷி மனைவியை ரயில் முழுவதும் தேடியும் கிடைக்காததால், ராமேஸ்வரம் இருப்பு பாதை காவல் நிலையத்தில், புகார் அளித்ததின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பண்டாரவாடை கிராமத்தில் ரயில் தண்டவாளம் அருகில் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸில் புகார் அளித்தனர். அது லெட்சுமிராணி குர்மியின் உடல் என்பதை உறுதி செய்த மயிலாடுதுறை ரயில்வே போலீசார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.