கோவைக்குள் ஒரு வைரஸ் நுழைந்திருக்கிறது..! – செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடிய எடப்பாடி பழனிசாமி..!
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து அவர் பேசினார். அப்போது, அதிமுக வேட்பாளர்கள் ஜெயராம், அம்மன் அர்ஜுனன் நடனமாடி எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர்.
இதையடுத்து கூட்டத்தினர் மத்தியில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "கோவை வடக்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள். தெரிந்த ஒருவரை மீண்டும் தேர்வு செய்தால் எளிதாக பணியாற்றுவார்கள்.
கோவை தெற்கு தொகுதியில் ஒரு வைரஸ் நுழைந்திருக்கிறது (செந்தில் பாலாஜியை மறைமுகமாக குறிப்பிட்டார்). கரூரை முடித்து விட்டு கோவை தெற்கு தொகுதிக்குள் அந்த வைரஸ் நுழைந்துள்ளது. சிந்தனை முழுவதும் தீய எண்ணம் கொண்ட நபர் தான் கோவை தெற்கு தொகுதியில் நிற்கிறார். நான் அவருடைய பேரை சொல்ல விரும்பவில்லை. கோடு போட்டால் அந்த நபர் ரோடு போடுவார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ரோடே போடாமல் அந்த நபர் கொள்ளையடித்து விடுவார்.
அந்த நபரை கரூர் மக்கள் நிராகரித்து விட்டனர். கரூரில் சுரண்டி முடித்தாகி விட்டது. கோவை செல்வம் நிறைந்த பகுதி என்பதால், அந்த நபர் இங்கும் தனது தொழிலை ஆரம்பித்து விடுவார். எனவே, கோவை தெற்கு தொகுதி மக்கள் விழித்து கொண்டால் பிழைத்து கொள்வீர்கள்.
திமுக ஆட்சியில், குடிநீர் வரி, மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. இதை தடுக்க முடியாத முதல்வராக மு.க. ஸ்டாலின் இருக்கிறார். எனவே, திமுகவை வேரோடு தமிழகத்தில் அழிக்க வேண்டும்.
இந்த தேர்தலில், தமிழகத்திற்கும் டெல்லிக்கும் பிரச்சினை என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதிமுகவை பற்றி பேச எதுவும் இல்லாததால் தந்தையும், மகனும் மாறி மாறி டெல்லியை பற்றி பேசுகின்றனர்.
அதிமுக கூட்டணி குறித்து பேசும் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று அன்றே சொல்லி விட்டார். அதன் பிறகும் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே போட்டி என அரைச்ச மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முதலில் இருந்த எடப்பாடி பழனிசாமி வேறு, இனிமேல் வரும் பழனிசாமி வேறு. கரூரில் அதிமுகவினர் மீது அதிகாரிகள் பொய் வழக்கு போடுகிறார்கள். ஆட்சி மாறும் போது காட்சி மாறும். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு அதிகாரிகள், அலுவலர்கள் தவறான செயலில் ஈடுபட்டால், யாராலும் காப்பாற்ற முடியாது. எவராக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன். நீங்கள் திமுகவிடம் சம்பளம் வாங்கவில்லை். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றீர்கள். ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் உங்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். நான் இதுவரை எங்கும் இப்படி பேசியதில்லை.
இங்குள்ள திமுக வேட்பாளர், மக்களின் வறுமையை பயன்படுத்தி பட்டியில் அடைத்து வைத்தால், பின்வளைவுகளை சந்திக்க நேரிடும். டெண்ட் போடுவது, மக்களை அடைப்பது போன்றவற்றை விட்டு விடுங்கள். மக்களை பட்டியில் அடைத்த பகுதிகளில் எந்தெந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பட்டியல் தருவார்கள். அவர்களுக்கு பின்னாளில் பாதிப்பு ஏற்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு தொழில்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் சரி செய்யப்படும்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்புக் கொடி கட்டுகிறாராம். கோவையில் நான் எங்கேயும் கருப்புக் கொடியை பார்க்க வில்லை. தேர்தல் தோல்வியால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வந்து விட்டது.
தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்காது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லி விட்டார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாதிக்காத அளவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால், மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதை தடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை செய்கின்றார்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து நான் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சொல்கிறார். உள்துறை அமைச்சர் கூறியதை தான் நான் சொன்னேன். ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தாலும் தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்தார்? அவருக்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது?
தமிழகத்தில் இருந்து 39 பேர், எம்.பி.க்களாக உள்ளனர். இவர்கள் எந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்திருக்கிறார்கள். சட்ட மன்ற தேர்தலை ஒட்டி, 234 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். அவை அனைத்தையும் நிறைவேற்றுவோம்" என்று அவர் தெரிவித்தார்.