×

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு என்னாச்சு? - பரவிய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐடி விங்!

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், துரைமுருகன் வருவதற்கு முன்பாகவே நிகழ்ச்சி தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. கனிமொழி பேசி முடித்ததைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் உரையாற்றத் தொடங்கினார். இந்தச் சூழலில், சற்று தாமதமாக அறிவாலயம் வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை வரவேற்க மகளிர் அணியினர் உட்பட யாருமே வெளியில் வரவில்லை என சொல்லப்படுகிறாது.

கட்டமைப்பு மற்றும் கட்சி விதிமுறைப்படி தகுந்த மரியாதையுடன் யாரும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லாததால், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்தபோதிலும், துரைமுருகன் நிகழ்ச்சிக்குள் செல்லாமல் சோகமான முகத்துடன் அங்கிருந்து காரில் ஏறித் திரும்பிச் சென்றார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவை மறுகட்டமைப்பு செய்யும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகனை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே துரைமுருகனை பதவியிலிருந்து விலகுமாறு கட்சியின் முக்கிய தலைகள் சிலர் நிர்பந்தித்ததாகக் கூறப்பட்டது. தற்போது தோல்விக்குப் பிந்தைய மறுகட்டமைப்பு பணிகளுக்கு இடையே, அந்தத் திட்டம் வேகம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியிலும், இதர பொறுப்புகளிலும் துரைமுருகனால் முன்போல தீவிரமாகச் செயல்பட முடியவில்லை. இருப்பினும், அவர் தானாக முன்வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்ய இதுவரை முன்வரவில்லை. இதனாலேயே, அவருக்கு மறைமுகமாகப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இன்றைய நிகழ்வும் அதன் ஒரு பகுதியோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

Durai Murugan|அறிவாலயத்தில் திமுக கூட்டம்..சோகமாக வெளியேறிய துரைமுருகன்? வைரல் வீடியோ..நடந்தது என்ன? #duraimurugan #dmk #mkstalin pic.twitter.com/wxOCwSnoQ8

— ABP Nadu (@abpnadu) June 13, 2026


 

இது மறுப்பு தெரிவித்த திமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில்,

கழகப் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்கள் குறித்து, சில செய்தி ஊடகங்களில் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் முற்றிலும் உண்மைக்கு முரணான அவதூறு செய்திகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மருத்துவர்களின் தீவிர அறிவுறுத்தலின் பேரில், தொற்று ஏற்ப்படுவதை தவிர்க்க அதிக மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைக் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தற்போது தவிர்த்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே, தலைமைக் கழகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகப் பணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மட்டும் பார்வையிட்டுவிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.

காணொளிகளை வெட்டி ஒட்டி, தாமாகவே ஒரு பொய்க் கதையை  உருவாக்கி செய்தியாக வெளியிடுவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.

நடைபெறாத ஒரு விஷயத்தைத் திணித்து, இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை இட்டுக்கட்டி வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடக தர்மத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.