ஆகஸ்ட் 24-ல் ஒரு நாள் அடையாள பால் நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு!
ஆவின் நிறுவனம், தினமும் காலை, மாலை இரண்டு நேரம், பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. அதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து, கூட்டுறவு சங்கங்கள் அமைத்து, அதன் வாயிலாக பல லட்சம் லிட்டர் பாலை, கொள்முதல் செய்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒரு லிட்டருக்கு பாலுக்கு, மூன்று ரூபாய் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியது. அதன் பின் விலை உயர்த்தவில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் கால்நடை தீவனம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க த் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தண்ணீர் தட்டுப்பாடு,- பசுந்தீவனம், உலர் தீவனம் பற்றாக்குறை மற்றும் அடர் தீவன விலை உயர்வு காரணமாக, பால் உற்பத்தி செலவு கடுமையாக கூடியுள்ளது. தனியார் நிறுவனங்கள், ஆவினை காட்டிலும் லிட்டர் ஒன்றுக்கு, 10 - 12 ரூபாய் வரை, பால் வழங்குபவர்களுக்கு கூடுதல் விலை வழங்குகின்றன.
இதனால், தனியார் பால் கொள்முதல் விலை உயர்வால் ஈர்க்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக தனியாரை நாடிச் செல்கின்றனர். இத்தகைய செயல்பாடுகளால் தான், ஆவின் பால் கொள்முதல் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது. எனவே, ஆவின் பால் கொள்முதல் விலையை, வரும் 23ம் தேதிக்குள் உயர்த்தவில்லை என்றால், 24ம் தேதியன்று ஒரு நாள் அடையாள பால் நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.