ராசிபுரம் அருகே முட்புதரில் தங்க நாணயங்கள் கிடப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு..!!
ராசிபுரம் அருகேயுள்ள கட்டனாச்சம்பட்டி மயானம் பகுதியில் உள்ள சாலையோர முட்புதரில் புதையல் அல்லது தங்க நாணயங்கள் கிடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் காட்டுத்தீயாய் பரவியது.
இத்தகவலை நம்பிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அந்த முட்புதர் பகுதியில் ஒரே நேரத்தில் திரண்டனர்.
முட்புதருக்குள் இறங்கி மக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிலருக்கு தங்க நிறத்தில் சிறிய நாணயங்கள் கிடைத்தன.
மக்கள் கண்டெடுத்த நாணயங்களைக் கல்லில் தேய்த்துச் சோதித்துப் பார்த்தபோது, அவற்றின் தங்க நிறம் மாறி வெளிர் நிறமாக (செம்பு நிறம்) மாறியது. அவை உண்மையான தங்க நாணயங்கள் இல்லை, வெறும் போலி நாணயங்கள் என்று தெரிந்ததும் மக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ராசிபுரம் காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தினர்.