×

தமிழகத்தில் உருவான புதிய கட்சி.. புதிய கட்சி தொடங்கிய காடுவெட்டி குரு மகள்..!

 

பாமகவில் முக்கிய தலைவராக வலம் வந்தவர் காடுவெட்டி குரு. இவர் மாநில வன்னியர் சங்க தலைவராக இருந்தார். பாமகவில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு 2 முறை எம்எல்ஏவாக இருந்தார்.கடந்த 2001ல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சட்டசபை தொகுதியிலும், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு பாமகவில் எம்எல்ஏவாக செயல்பட்டு வந்தார். இவர் 2018ல் உடல்நலக்குறைவால் காலமானார்.

காடுவெட்டி குருவிற்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் பெயர் கனல் அரசன். மகள் பெயர் விருதாம்பிகை. இந்நிலையில் தான் விருதாம்பிகை அவ்வப்போது பாமகவை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை விருதாம்பிகை அறிமுகப்படுத்தினார். பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே ராமதாஸ், அன்புமணி தரப்பு என இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில் 3வதாக ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டுள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

கட்சியின் கொள்கை என்னவென்றால் சமூகநீதி.. அனைத்து சமுதாய மக்களுக்கும் சமமான சரியான சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த கட்சி உருவாக்கி உள்ளோம். சமுதாய நீதி என்ற அடிப்படையில் வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டது. அதில் எங்கள் அப்பா கடைசி வரை உறுதியாக இருந்தார். ராமதாஸ் அவ்வளவு பாடுபட்டார். தனது மகன் (அன்புமணி ராமதாஸ்) மீதான பாசத்தினால் அந்த கொள்கையில் இருந்து ராமதாஸ் வெளியே வந்துவிட்டார். ஆனால் எங்கள் அப்பா அந்த கட்சிக்காக கடைசி வரை உண்மையாக இருந்தார். வன்னியர் சமுதாய மக்களுக்காக உண்மையாக இருந்தார். எந்தவொரு மகனுக்காக இந்த சமுதாயத்தை பின்தங்கிய நிலைக்கு கொண்டு சென்றாரோ அந்த மகனே ராமதாஸை இவ்வளவு தூரம் எதிர்ப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது.

எங்களுக்குள் மாற்று கருத்துகள் இருக்கலாம். ராமதாஸை நாங்கள் விமர்சிக்கலாம். ஆனால் மகனுக்காக கட்சியை அர்ப்பணித்த தந்தை ராமதாை அவர் இழிவாக பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் வன்னியர்களுக்கு எதிரானதாகவே உள்ளது. அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் சண்டையிட்டு சமுதாய மக்களை கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். தமிழ்நாடு கட்சியாக இருந்த பாமக இப்போது தந்தை - மகன் கட்சியாக உள்ளது'' என விமர்சனம் செய்தார்.