×

மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை சென்றவர் சிறுத்தை தாக்கி பலி

 

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை வந்த பக்தர் ஒருவரை நேற்று சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவத்தை தொடர்ந்து இந்த வழித்தடத்தில் பாதயாத்திரை செல்வதற்கும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் அம் மாநில அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. 

தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு,  மாண்டியா மாவட்டம் சீரனஹள்ளி கிராமத்தில் இருந்து குழுவினருடன் பாதயாத்திரை வந்த பிரவீன் என்ற 30 வயது இளைஞரை நேற்று சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். சிறுத்தை கடித்து இழுத்து சென்ற பிரவீன் உடல் வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.  இந்நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில் பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு சுமார் 17 கிமீ முன்பாக தலபெட்டா பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் இருசக்கர வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். பாதயாத்திரை வந்த பக்தர்கள் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில்,  மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலை இது என்பதால் இந்த வழித்தடத்தில் தமிழ்நாடு வரக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
பாதுகாப்பு கருதி இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ராமாபுரம், கர்கேகண்டி, பர்கூர், அந்தியூர் வழியாக மாற்று பாதையில் பல கிமீ சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாதேஸ்வரன் மலை கோவில் செல்ல தடை ஏதும் இல்லை. ஆனால் அதனை கடந்து மைசூர் செல்லும் வனசாலையில் 17 கிமீ இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை முதல்கட்டமாக 3 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தரை தாக்கிய ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.