×

அரசியலில் முக்கிய திருப்பம் : த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 

 

'அ.தி.மு.க. ஒன்றிணைந்தால் தான் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும்' என்று கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி, 'அ.தி.மு.க.வுடன் இனி சேரப்போவதில்லை' என்று தடாலடியாக அறிவித்து விட்டார். ஏன் இந்த திடீர் மனமாற்றம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டது? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எழுந்தது. அதற்கான பின்னணி தகவல்களும் கிடைத்துள்ளன.

மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு தனக்கு இருப்பதால் எப்படியும் அ.தி.மு.க.வில் இணைந்துவிடலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கொண்டிருந்தார். பா.ஜ.க. மேலிடமும் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோதும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

இதனால், அ.தி.மு.க.வில் இணைய முடியாவிட்டாலும் அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியிலாவது இடம்பெறலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைத்தார். ஆனால், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் டிடிவி தினகரனின் 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு' 6 தொகுதிகள் ஒதுக்க முன்வந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த தகவலை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் சென்னையில் நேற்று அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம்? என்று நிர்வாகிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டது. இதற்கான படிவம் ஒன்றும் நிர்வாகிகள் மத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் திமுக, த.வெ.க. ஆகிய இருகட்சிகளின் பெயர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அதாவது, மாவட்டச் செயலாளர்கள் 80 பேரில் 72 பேர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், நிர்வாகிகளில் ஒரு சிலர், திமுக கூட்டணிக்கு செல்வதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் கூறியுள்ளனர். மொத்தத்தில், 90 சதவீதம் பேர் த.வெ.க.வில் இணையவே விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையிலேயே, 'அ.தி.மு.க.வில் இனி இணையப்போவதில்லை' என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், த.வெ.க.வுடன் விரைவில் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. த.வெ.க. அணியில் 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தயாராகி வருகின்றனர்.