×

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. வடதமிழகத்திற்கு காத்திருக்கும் கனமழை..!

 

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில்  தமிழகத்தில் நாளை ( அக்.15) வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  அத்துடன் இன்று வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, இன்று  தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில்  காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாலும் அடுத்த 4 நாட்களுக்கு தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.  

அதிலும் நாளை  (அக்டோபர் 15) மற்றும்  நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும்  வானிலை மையம் கணித்துள்ளது.