×

நிச்சயம் ஒரு ஒளி பிறக்கும்: சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக தலைவர் விஜய் உறுதி..!

 

தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தவெக கட்சித் தலைவர் விஜய் அவர்கள் கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளி ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பேராயர்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு வழங்கினார் விஜய். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்களுக்கு தவெக தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும் விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.


இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது:-

இது ஒரு அன்பான தருணம், அழகான தருணம், அன்பும் கருணையும் தானே அனைத்திற்கும் அடிப்படை. தமிழ்நாட்டு மண்ணும் தாயன்பு கொண்ட மண். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடும் மண். வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறு வேறு என்றாலும் எல்லோரும் ஒன்றுதான்.


கட்சி தொடங்கியதும், கடவுள் நம்பிக்கை உண்டு என அறிவித்தது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கைதான் மத நல்லிணக்கத்தை விதைக்கும்; மற்றோரின் நம்பிக்கையை மதிக்கக் கற்றுத் தரும். நம்பிக்கை குறித்த பலத்தை பற்றி சொல்ல பைபிளில் ஏராளமான கதைகள் உண்டு.

ஒரு இளைஞனுக்கு எதிராக சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு பாழும் கிணற்றில் தள்ளிவிட்ட கதை உண்டு. அந்த இளைஞர் மீண்டு வந்து, அந்த நாட்டுக்கே அரசனாகி, துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல, நாட்டையும் காப்பாறினார். அந்த கதை யாரைப் பற்றிய கதை என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.


எவ்வளவு பெரிய எதிரிகளையும் நாம் வெல்லலாம் என்ற உறுதியை அந்த கதைகள் நமக்கு கற்று தருகின்றன. மக்களை மானசீகமாக நேசிப்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள். சமூக, சமய நல்லிணக்கத்தை காப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம் என உறுதி அளிக்கிறேன். மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம்.

கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லா வல்ல இறைவனுக்கே. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.