விஜய்க்கு இடையூறு- தாராபுரத்தில் நாதக வேட்பாளர் குண்டுக்கட்டாக கைது
தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு செய்வதற்கு இடையூறு எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இரு மருங்கிலும் திரண்டு முதலமைச்சர் விஜய்க்குதவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது அங்கு கூடியிருந்த தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் விசில் அடித்து TVK.. TVK.. என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கட்சியின் கொடியை அசைத்து அவர்களை பார்த்து கையசைத்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தவெகவினர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வாகனத்தை செல்லவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பரப்புரை செய்யவிடாமல் தடுப்பதாக தவெகவினரை கண்டித்து நாம்தமிழர் கட்சியினர் மறியல் செய்தனர்.அந்த இடத்தை முதல்வர் விஜய் கடந்து சென்ற பின், விஜய் Road Show செய்வதற்கு இடையூறு எனக் கூறி, மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மு.கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினரை காவல் துறை குண்டுக்கட்டாக கைது செய்தது.