டிவைடரை தாண்டி பாய்ந்த அதிவேக கார்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்... நிலைகுலைந்த குடும்பம்
கரூர் மொலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 35). கார்த்திக் இன்று (அதிகாலையில் அவரது தந்தை செல்வராஜ் (வயது 60) மற்றும் தாய் காந்திமதி (வயது 55) ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான கரூர் நோக்கி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூரூ நோக்கி மற்றொரு குடும்பத்தினர் எதிர்புற சாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி அதிவேகமாக வந்த அந்த கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை தாண்டி பாய்ந்து, கார்த்திக்குமாரின் கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கார்த்திக்குமார், செல்வராஜ், மற்றும் காந்திமதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களின் உதவியுடன் உடல்களை மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மற்றொரு காரில் இருந்த கிசான்கெளடா (வயது 19) உட்பட 3 பேர் விபத்தில் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பள்ளபட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.