சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே போல்ட் நட் கழண்டதால் அரசு பேருந்து விபத்து!
சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே போல்ட் நட் கழண்டதால் அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பாபநாசத்தில் இருந்து 22.6.2026 காலை 6 மணியளவில் சுரண்டை, சங்கரன்கோவில், சிவகாசி, விருதுநகர் வழியாக டிஎன் 72-2003 எண் கொண்ட பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மதியம் 12.45 மணியளவில் விருதுநகர் போக்குவரத்து பணிமனையை தாண்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடிரென பஸ்சில் சத்தம் கேட்டது. சுதாரித்துக் கொண்ட டிரைவர் பேருந்தை மெதுவாக நிறுத்த முயன்றார். மீண்டும் சத்தம் கேட்கவே பேருந்தை உடனடியாக நிறுத்தினார். அப்போது பேருந்தில் முன்பக்க இடது புற சக்கரத்தில் ஐந்து போல்ட்நட்டுகள் கட்டாகி இருந்தது. பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே மூன்று போல்ட் நட்டுகளும் ,அங்கிருந்து 100 அடி தொலைவில் இரண்டு மூன்று போல்ட் நட்டுகளும் கிடந்தது. பேருந்தை டிரைவர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக நிறுத்தியதால் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இல்லையெனில் சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது முன் பக்கத்தில் உள்ள சக்கரங்கள் கழண்டால் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. நான்கு வழிச்சாலையில் பேருந்து கொண்டிருக்கும் நேரத்தில் போல்ட் கட்டான சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைபாஸில் செல்லும் பேருந்தில் போல்ட்நட் கட் ஆனால் அதன் தரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது. போக்குவரத்து துறையில் தரமற்ற உதிரி பாகங்கள் வாங்கி பயன்படுத்துவதால் இது போன்று பேருந்துகள் பழுதாகி விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தரமான உதிரிபாகங்கள் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இனியும் அலட்சியம் காட்டினால் நிச்சயம் அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கி பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தொலைதூர வழித்தடங்களுக்கு நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.