×

இனி பாசி பிடித்த கேன்களை விற்றால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்..!

 

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் 20 லிட்டர் குடிநீர் கேன்களில் தரம், பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, FSSAI உரிமம் எண் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாசி பிடித்த, அசுத்தமான கேன்களில் தண்ணீர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கவும் உத்தரவு போடப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து குழுவாக ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேன் குடிநீரை நேரடியாகச் சூரிய ஒளியில் படும்படி தேக்கி வைக்கக் கூடாது என நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.

ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்பது விதியாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது. குடிநீரில் கால்சியம் (10 - 75 மி.கி/லிட்டர்), மெக்னீசியம் (5-30 மி.கி/லிட்டர்) ஆகிய தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

முறையான அனுமதி, தரச் சான்றிதழ் இன்றிச் செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. முறையான அனுமதி, தரச் சான்றிதழ் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவு தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் தரத்தில் ஏற்படும் குறைபாடுகள் மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மிகவும் தேவையானதாக கருதப்படுகிறது.