×

ஜனநாயகனால் ஏற்பட்ட விபரீதம்- திரையில் தயிர் பாக்கெட் வீச்சு

 

சென்னை வித்யா திரையரங்கத்தில் ஜனநாயகன் படம் பார்க்கவந்த விஜய் ரசிகர்கள் திரையில் தயிர் பாக்கெட் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பிறகு, ஜனநாயகன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனை அவரது ரசிகர்கள் திருவிழாவை போன்று கொண்டாடினர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் ரூ.48.27 கோடி, வெளிநாடுகளில் ரூ.30 கோடி என ரூ.78.27 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் சென்னை வித்யா திரையரங்கத்தில் ஜனநாயகன் படம் பார்க்கவந்த விஜய் ரசிகர்கள் திரையில் தயிர் பாக்கெட் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள சென்னை வித்யா திரையரங்கத்தினர் எக்ஸ் தளத்தில், "தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, அவர்களை முடிந்தவரை ஈர்க்கும் வகையில்தான் நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம். ஆனால், நேற்று இரவு சில சமூக விரோதிகள் எங்கள் திரை மீது தயிர் பாக்கெட்டை வீசியுள்ளனர். அந்த திரையை மாற்ற எங்களுக்கு லட்சக் கணக்கில் செலவாகும். இனி எங்கள் தியேட்டரில் மாஷ்அப்களுக்கோ கொண்டாட்டங்களுக்கோ அனுமதி இல்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.