அவமானத்திற்குப் பயந்து செய்த கொடூரம்! பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற காதல் ஜோடி!
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தின் தெஹ்காம் (Dehgam) துணைக்கோட்டத்திற்கு உட்பட்ட அங்குதலா கிராமத்தில், பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்று குழியில் வீசியதாக 21 வயது இளம்பெண்ணும், அவரது 32 வயது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்பனா சோலங்கி என்ற 21 வயது இளம்பெண், தனது கணவரைப் பிரிந்து கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் புகுந்த வீட்டிற்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், 32 வயதான கால்ஜி சோலங்கி (காலாஜி) என்பவருடன் ஏற்பட்ட திருமணத்திற்கு மீறிய உறவால் கல்பனா கர்ப்பமடைந்துள்ளார்.
கடந்த நவம்பர் 14-ஆம் தேதி இரவு கல்பனாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்வதாகக் கூறி அருகிலுள்ள மேய்ச்சல் நிலப்பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்த நிலையில், உடனடியாக அக்குழந்தையைக் காதலன் காலாஜியிடம் ஒப்படைத்துள்ளார். சமூக அவமானத்திற்குப் பயந்து, பிறந்த சில மணி நேரத்திலேயே அக்குழந்தையின் கழுத்தை நெரித்த காலாஜி, குழந்தையை அங்கிருந்த குழி ஒன்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
அப்பகுதி மக்கள் குழியில் கிடந்த குழந்தையை மீட்டு காந்திநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தெஹ்காம் பகுதி காவல்துறையினர் கல்பனா மற்றும் காலாஜி ஆகிய இருவர் மீதும் கொலை மற்றும் குழந்தையைக் கைவிடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.