உறவினர் மகள் என்றும் பாராமல் கொடூரம்! பிளஸ் 1 மாணவியை சீரழித்தவனுக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை..!
சிவகங்கையை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 26). இவர் கடந்த 2022- ஆம் ஆண்டு தனது உறவினரின் மகளான பிளஸ் 1 படித்து வந்த 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமி ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கருப்புசாமியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு மீண்டும் போக்சோ நீதிமன்ற நீதிபதி ரோகிணி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனலட்சுமி, தனது இறுதி வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து கருப்புசாமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார்.குற்றவாளி கருப்புசாமிக்கு 61 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 4,000 அபராதமும் விதித்து பரபரப்புத் தீர்ப்பை வழங்கியுள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக தமிழ்நாடு அரசு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பின் முழு விவரங்கள்:
சிறுமியை மிரட்டிய குற்றத்திற்காக கருப்புசாமிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் பலமுறை பாலியல் வன்கொடுமைச் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும், சிறுமியைக் கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தனது உறவினர் மகள் எனத் தெரிந்தும் பாலியல் வன்கொடுமைச் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.