மது போதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி படுகொலை
சிவகாசி அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து தேநீர் கடை நடத்தி வரும் ரங்கராஜ்- சரோஜா தம்பதியினரின் மகன் ராஜசேகர்( வயது 40). கட்டிட தொழிலாளியான இவருக்கும் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 38) என்பவருக்கும் திருமணமாகி, 6- வயதில் தர்ஷன் என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் ராஜசேகரை பிரிந்த மாரியம்மாள் தனது மகனுடன் அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளி ராஜசேகர் வீட்டின் பக்கத்து தெருவான முஸ்லிம் தெருவில் குடியிருப்பவர் விநாயகமூர்த்தி( வயது 48 )அவரது மகன்கள் வைரப்பிரகாஷ்( வயது 25 )விக்ரமன்(வயது 24 ) இவர்கள் மூவருமே கட்டட தொழிலாளிகள்.
மதுபானம் அருந்திய போது ராஜசேகருக்கும், விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்களுக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரச்சனையிருந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த தந்தையும்- இரண்டு மகன்களும் என மூவரும் சேர்ந்து முஸ்லிம் தெரு பகுதியில் வைத்து ராஜசேகரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட ராஜசேகர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நாரணாபுரம் கிராமத்திற்கு சென்ற போலீசார்கள் ராஜசேகரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்குப் பதிவு போலீசார் விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் வைரப்பிரகாஷ், விக்ரமன் ஆகிய மூவரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.