நூறாண்டு கால விநோத வழிபாடு: ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி..!
மகா சிவராத்திரி அன்று, 96 வயதுடைய முத்தம்மாள் என்ற பாட்டி, கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் (பணியாரம்) சுட்டு அம்மனுக்கு படைக்கும் நூறாண்டு கால விநோத வழக்கம் பிரசித்தி பெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார்பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில் கொதிக்கும் நெய்யில் 96 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பங்கள் சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயிலில் மகா சிவராத்திரி அன்று இரவு கொதிக்கும் நெயில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதன்படி சிவராத்திரி நாளான நேற்று இரவு 11.50 மணிக்கு கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. மூதாட்டி முத்தம்மாள் அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து தன் நெற்றியிலும், கோயில் பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கும் திருநீருடன் கலந்து பூசினார். பின்னர் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு அதனை கையால் எடுத்து பனை ஓலை பெட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கபட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது.