×

முதலமைச்சர் விஜய் மீது ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்! ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி கடிதம்!

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், "நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோசப் விஜய் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் வேறு சின்னங்களில் நின்று வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், மதிமுகவின் பொதுக்குழு கூட்டம், கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியபோது, 'மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்யுமாறு விஜய் கூறியதாகவும், அவர்களை மீண்டும் வெற்றி பெற வைப்பதாக விஜய் உறுதி அளித்தார்' எனவும் தெரிவித்தார். ஆனால், அதனை மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில் செல்வன், ராஜேந்திரன் ஆகியோர் நிராகரித்துவிட்டதாகவும் வைகோ கூறினார்.

கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன், சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செந்தில் செல்வன் ஆகிய இருவரும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால், ஆளும் தவெக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலக செய்ய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இத்தகைய குதிரை பேரத்தில் முதலமைச்சர் நேரடியாக ஈடுபட்டுள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கு தமிழ்நாடு ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

மேலும், மாற்றுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜிநாமா செய்யச் சொல்லி தனது கட்சியில் இணைத்துக் கொள்வது, ஜனநாயகத்திற்கு எதிரானது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், எஸ்.ஜெயக்குமார், பி.சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இந்த காலியிடங்களில், தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் குதிரை பேரம் நடத்தக்கூடாது. எனவே முதலமைச்சர் மீது ஊழல் கண்காணிப்பு துறையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குதிரை பேரத்தை ஊக்குவிக்க கூடாது" என்று அந்த கடிதத்தில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.