அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு..!
வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு.பறக்கும் படையினர் அளித்த புகாரில் அடிப்படையில் நடவடிக்கை
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, திமுக பொதுச் செயலாளரும், காட்பாடி வேட்பாளருமான துரைமுருகன், வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று காலை சுமார் 11 மணியளவில் காட்பாடி செங்குட்டை திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து ஆதரவாளர்கள் புடை சூழ துரைமுருகன் ஊர்வலமாக புறப்பட்டார்.
தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவர், காட்பாடி ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜ் சிலைக்கும், விருதம்பட்டு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் காட்பாடி – சித்தூர் சாலை வழியாக கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அமைச்சர் துரைமுருகனுடன் வேலூர் எம்.பி.யும், அவரின் மகனுமான கதிர் ஆனந்த், டீக்காராமன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தல், பொதுப் போக்குவரத்துத்து இடையூறு ஏற்படுத்துதல் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான புகாரின் பேரில், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக பிரிவுகள் 189(2), 288, 292 BNS கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, காட்பாடி வேட்பாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் இருந்து வேலுருக்கு கடந்த 30-ஆம் தேதி வருகை புரிந்தார்.
அப்போது தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த துரைமுருகன், சாலையில் ஊர்வலம் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது இரண்டாவது முறையாக அவர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.