தவெக அரசு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் உறுப்பினரும், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவருமான கே.பாலு, தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் "தமிழ்நாட்டில் 1971- ஆம் ஆண்டு வரை இருந்த பூரண மதுவிலக்கு நீக்கப்பட்டு, தற்போது டாஸ்மாக் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், ஊட்டச்சத்துக்களை மக்களிடையே ஊக்குவித்தல், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள், மதுபானங்களை தடை செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47- க்கு முரணாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம், திருக்கோயில்கள் உள்ளிட்டவைகளுக்கு அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த மே 12- ஆம் தேதி முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையிலும், அவற்றில் பல கடைகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் வசதியைத் தொடங்கி வைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், ஆகஸ்ட் 07- ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார். ஆன்லைன் மூலம் மதுவாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்க முடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மதுபானங்கள் வாங்க வாய்ப்புள்ளது.
முதியவர்கள், பெண்கள் என்று கால் வலிக்க ரேஷன் கடை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்பவர்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லை. ஆனால், மது குடிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும். எனவே, ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையையும், அதற்கு அனுமதி வழங்கி நிதித்துறைச் செயலாளர் ஜூலை 24- ஆம் தேதி பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தீர்வுக் காணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.
அந்த மனு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.